பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வருகிறார், சல்மான் கான். இவரை, கொலை செய்ய பிரபல கேங்க்ஸ்டாரான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிஷ்னோய் சமூகத்தில் புனிதமான விலங்காகப் பார்க்கப்படும் மான்களை, கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான் கான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதுதொடர்பாக, அச்சமூகம் அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாகவே, அவர் அந்தக் கும்பலால் குறிவைக்கப்படுகிறார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை சோமி அலி, தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலியாக அறியப்படுவது தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு. நான் அமெரிக்காவில் எத்தனையோ நல்ல செயல்களைச் செய்து பல சாதனைகளைச் செய்திருக்கிறேன்.
எனினும் மக்கள் இன்னும் என்னை சல்மானின் முன்னாள் காதலியாகவே அடையாளம் காட்டுகிறார்கள். இந்திய சினிமாவைப் பற்றி நான் நினைக்கும்போதெல்லாம், அது சல்மானை நினைவுபடுத்துகிறது. மேலும் அது எனது சோகத்தையும் மனச்சோர்வையும் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே சோமி அலி, சல்மான் கான் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து அப்போது, “அவர் பெண்களை துன்புறுத்துபவர். நான் மட்டுமின்றி பலரும் துன்புறுத்தப்பட்டுள்ளோம். அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது" எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இந்தப் பதிவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகை சோமி அலி, மான்கள் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானை மன்னிக்குமாறு பிஷ்னோய் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சமீபத்தில் சோமி அலி, கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோயை ஜூம் அழைப்பில் பேச அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவரது பதிவில், லாரன்ஸ் பிஷ்னோயை (சகோதரர்) என்று குறிப்பிட்டு, அவருடன் வீடியோ அழைப்பில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தார். இது, நாடு முழுவதும் பேசுபொருளானது.