தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் படு பிஸியாக இயங்குபவர் நடிகை சமந்தா. கொரோனா ஊரடங்கு சமயத்திலிருந்தே ரசிகர்களோடு சமூக வலைத்தளங்கள் மூலமாக இணைந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார். போட்டோ, வீடியோ என பகிர்ந்து அமர்க்களப்படுத்தி வருகிறார்.
அந்த வரிசையில் வீட்டுத் தோட்டம் அமைக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிப்ஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
‘நீங்கள் வாங்குகின்ற விதைகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற விதைகள் முறையாக விளையாது.
அதனால் விதைகள் வாங்கும் போது கவனம் கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற விதைகள் வெளிர்ந்து போயிருக்கும், நீரில் மிதக்கும், அதன் தோல் சுருங்கி இருக்கும். விதைகள் கடைகளிலிருந்து வாங்கப்பட்டிருந்தால் அதன் காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும்.
அப்படி வாங்கப்படும் விதைகளை சூரிய ஒளி படாத இடங்களில் வைக்க வேண்டும். விதைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஊற வைத்து விதைப்பது நன்று.
விதைப்புக்கு முன்னர் நிலத்தில் தண்ணீரை தெளித்து விதைக்க வேண்டும். மண் இலகுவாக இருக்க வேண்டும். அதே போல நிலப்பரப்பிலிருந்து 1 அல்லது 2 சென்டி மீட்டர் ஆழம் மட்டுமே விதைகளை விதைக்க வேண்டும்.
விதைப்புக்கு பின்னர் முடிந்தால் கவர் போட்டு மூடி வைக்கலாம். அதே போல முதல் மூன்று நாட்களுக்கு முளைப்பு வரும் வரை தண்ணீரில் தெளித்து மட்டும் விட்டால் போதும்.
நான் சொன்னதை ஃபாலோ செய்து நீங்களும் உங்கள் வீட்டில் தோட்டம் அமைத்து அந்த படத்தை #GrowWithMe என்ற டேக்கில் பகிரலாம்’ என தெரிவித்துள்ளார்.
அதிகளவில் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது தான் நான் ஃபிட்டாக இருக்க காரணம் என சமந்தா கடந்த வாரம் சொல்லியிருந்தார்.