நடிகை, பாடகி என பல்வேறு அடையாளங்களை கொண்டவர் ரம்யா நம்பீசன். தமிழ், மலையாளம் என தொடர்ந்து நடித்தும் பாடியும் வரும் ரம்யா நம்பீசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் மண்டை ஓடு இருக்கிறது. அதில் அனைத்து மதத்தின் பெயரும், ஜாதிகள் பெயரும் இடம் பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் மண்டை ஓடு ஒன்றுதான். சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மதம், ஜாதியால் பிரிக்கப்பட்டாலும் மனிதனின் மண்டை ஓடு, ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புகைப்படத்தால் உணர்த்தியுள்ளார் ரம்யா நம்பீசன்.
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன.
டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கலவர பூமியாக காட்சியளித்த அந்நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த கலவரத்துக்கும் உயிர்பலிக்கும் மனித இனத்தினிடையே இருக்கும் பாகுபாடே காரணம் என்ற ரீதியில் ரம்யா நம்பீசன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.