HBD Raadhika Sarathkumar | வெகுளித்தனமும் கம்பீரமும் கலந்த கலவை... ராதிகா என்னும் நடிப்பு ராட்சசி!

நடிப்பு ராட்சி ராதிகாவின் இந்த பிறந்தநாளில், தென்னிந்திய சினிமாவிற்கு அவர் தந்துள்ள சிறந்த பங்களிப்பையும் திரைப்படங்களையும் சற்று நினைவு கூரலாம்.
ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
ராதிகா சரத்குமார் பிறந்தநாள்புதிய தலைமுறை
Published on

"சார்.. இந்தப் பொண்ணா ஹீரோயின்?” 

- தன்னுடைய கண்களை தன்னாலேயே நம்ப முடியாமல் கேட்டார் பாக்யராஜ். கேள்வி கேட்கப்பட்டது, அவருடைய குருநாதரான பாரதிராஜாவிடம். 

பாக்யராஜ், பாரதிராஜா, ராதிகா
பாக்யராஜ், பாரதிராஜா, ராதிகா

சற்றே குழப்பமும் நிறைய நம்பிக்கையும் கலந்த தொனியில் பதில் அளித்தார் பாரதிராஜா. “ஆமாய்யா.. இந்தப் பொண்ணுதான்”... பாக்யராஜால் மட்டுமல்ல, கேமிராமேன் நிவாஸ் உள்ளிட்ட உதவி இயக்குநர்களால் கூட நம்பவே முடியவில்லை. அவர்களுக்கும் அதே கேள்விதான் உள்ளே அலையடித்துக் கொண்டிருந்தது “இந்தப் பொண்ணா ஹீரோயின்?

என்ன.. சார்.. பூசணிக்கா மாதிரி இருக்குது?” என்று டைரக்டரின் காதை ரகசியமாகக் கடித்தார் பாக்யராஜ். அந்தக் கிண்டலான கமெண்ட், ‘ஹீரோயின்’ காதில் விழுந்து விட்டது. எனவே அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை பாக்யராஜிடம் பாராமுகமாகவே நடந்து கொண்டார் அந்த ‘நடிகை’. 

“இந்தப் பொண்ணா ஹீரோயின்?” என்று ஏளனமாக பார்க்கப்பட்ட அந்தப் பதினாறு வயதுப் பெண்தான்,

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு மேல் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்து அசைக்க முடியாத அந்தஸ்திற்கு பின்னர் நகர்ந்தார்.
ராதிகா
ராதிகா

அது மட்டுமல்லாமல், ஆறு முறை பிலிம்போ் விருது, மூன்று முறை மாநில அரசின் விருது, இரண்டு முறை நந்தி விருது, தேசிய விருது ஆகிய அங்கீகாரங்களைப் பெறுமளவிற்கு உயர்ந்தார்.

ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
“அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை” - கொட்டுக்காளி படக்குழுவிற்கு கமல்ஹாசன் பாராட்டு

அந்த நடிகை யார்?

யெஸ்.. ராதிகா என்னும் நடிப்பு ராட்சசிதான். 

பல்வேறு பாத்திரங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை நிரூபித்து நாயகியாக பல படங்களிலும் பிறகு துணை நடிகராக மேலும் பல படங்களிலும் நடித்து வரும் ராதிகாவிற்கு இன்றோடு 62 வயது நிறைவடைகிறது. இந்தப் பிறந்த நாளில் தென்னிந்திய சினிமாவிற்கு அவர் தந்துள்ள சிறந்த பங்களிப்பையும் திரைப்படங்களையும் சற்று நினைவு கூரலாம். 

ராதிகா
ராதிகா

“என்னையெல்லாம் யாரு சார் பார்ப்பாங்க?”

ராதிகா சினிமாவிற்குள் வந்ததே ஒரு தற்செயல் விபத்துதான். பதினாறு வயதினிலே திரைப்படம் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’ என்னும் அடுத்த படத்திற்கான தயாரிப்பு பணிகளில் இருந்தார் பாரதிராஜா. ஒரு முன்னணி கதாநாயகியை ஒப்பந்தம் செய்து கடைசி நேரத்தில் அது கேன்சல் ஆகி விட்டது. அதே சமயத்தில் படப்பிடிப்பிற்கான வேலைகளும் ஆரம்பித்து விட்டன. அந்தக் குழுவை அப்படியே காக்க வைத்து விட்டு சென்னைக்கு விரைந்தார் பாரதிராஜா.

ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அபூர்வ ராகங்கள் | கே.பி-யின் ‘ஜென்டில்மேன்’ ரஜினிகாந்த்!

பாரதிராஜாவின் அப்போதைய நெருக்கடி, படத்திற்கு ஒரு ஹீரோயின் தேவை. உடனடியாக தேவை. கடைசி நேர அசந்தர்ப்பத்திலும் நிறையப் பெண்களை ஆடிஷன் செய்தாலும் அவருக்குத் திருப்தியில்லை. நடனம் கற்றுக் கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணை பார்க்கலாம் என்று அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘க்ரூப் போட்டோவில்’ ஓரமாக நின்றிருந்த ஒரு பெண்ணின் மீது பாரதிராஜாவின் பார்வை நிலைத்தது. 

கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா
கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா

இதோ.. இவள்தான். என்னுடைய படத்தின் நாயகி. பாஞ்சாலி’ என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. யாரென விசாரித்ததில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் எனவும், லண்டனில் படிக்கும், தமிழ் சரியாக பேசத் தெரியாத அந்தப் பெண் விடுமுறையில் வந்திருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டது. உடனே அங்கு விரைந்தார்.

அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரியாத விஷயம் என்னவெனில், தான் பார்க்கச் செல்லும் பெண், தி கிரேட் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்பது. தெரிந்திருந்தால் பயத்தில் அப்படியே திரும்பியிருப்பாரோ, என்னமோ?!
ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

என்னதான் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிரபலமான நடிகரின் மகளாக இருந்தாலும்,  சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமோ, ஆர்வமோ துளி கூட ராதிகாவிடம்  அப்போது இருந்ததில்லை. மேலும் தமிழும் சரியாகப் பேச வராது. சரளமான ஆங்கிலம்தான்.  எனவே பாரதிராஜா அணுகிய போது “என்னையெல்லாம் யாரு சார் பார்ப்பாங்க?” என்று அந்த வாய்ப்பை தள்ளி விட முயன்றார். ஆனால் பாரதிராஜாவால் தன் கற்பனை நாயகியை அப்படி எளிதாக விட்டு விட முடியவில்லை. அப்படியும் இப்படியும் நடக்க விட்டு, தாவணி அணிய வைத்து ‘ஓகே ..ரைட். .பார்த்துக்கலாம்’ என்று படப்பிடிப்பிற்கு அள்ளிக் கொண்டு வந்து விட்டார். 

கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா
கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா

புதிய பாதையை அமைத்துத் தந்த தெலுங்கு சினிமா

1978-ல் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. பாஞ்சாலி என்னும் வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தில், லண்டன் ஆங்கிலம் பேசும் ராதிகா கச்சிதமாகப் பொருந்திப் போனதற்கு பாரதிராஜாதான் காரணமாக இருக்க வேண்டும். ஒரு சாதாரண காட்சிக்கு கூட பல டேக் வாங்கி, ‘நடிக்க மாட்டேன்’ என்று அழுது அடம்பிடித்த ராதிகாவிற்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகி பாத்திரங்களில் ராதிகா நடித்தாலும், அவருக்குத் திருப்புமுனைப் பாதையை அமைத்துத் தந்தது, தெலுங்கு சினிமாதான். “நடிப்பு என்னும் விஷயத்தை நான் சீரியசாக எடுக்க ஆரம்பித்தது, தெலுங்கில் நடிக்கத் துவங்கிய பிறகுதான். அந்த அளவிற்கு சிறந்த பாத்திரங்கள் அங்கு கிடைத்தன” என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார் ராதிகா.

ராதிகா
ராதிகா

ராதிகா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமே அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. 1981-ல் வெளியான ‘நியாயம் காவாலி’ என்கிற திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் பாராட்டப்பட்டதோடு, ‘சிறந்த அறிமுக நடிகைக்கான’ பிலிம்பேர் விருதையும் பெற்றார். (இந்தப் படம்தான் பிறகு ‘விதி’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது). அடுத்த வருடத்தில் வெளியான ‘பட்ணம் வொச்சின பதிவிரதலு’ என்கிற படமும் மகத்தான வெற்றியைப் பெற்றது. இதற்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது.

தெலுங்கு சினிமாவின் மிகச் சிறப்பான இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். இவருடைய இயக்கத்தில் ராதிகா நடித்த ‘சுவாதி முத்யம்’, அவரது நடிப்புப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. கமலுடன் போட்டி போடும் அளவிற்கு சிறந்த நடிப்பைத் தந்தார். 

சுவாதி முத்யம் படத்தில் ராதிகா
சுவாதி முத்யம் படத்தில் ராதிகா

இப்படத்தில் இளம் விதவையான லலிதா சுற்றத்தாரால் புறக்கணிக்கப்படுகிறார். சிவய்யா என்கிற மனநலம் வளர்ச்சி குன்றிய இளைஞன் லலிதாவின் மீது பரிதாபப்பட்டு தாலி கட்டி விடுகிறான். ஒரு விபத்து போல் நிகழ்ந்து விடுகிற திருமணத்தை ஏற்றுக் கொண்டு தன் பிள்ளையோடு சிவய்யாவையும் இன்னொரு பிள்ளையாக அரவணைத்துக் கொள்கிற லலிதாவின் பாத்திரத்தில் தனது நடிப்பை நிதானமான மற்றும் முதிர்ச்சியான பாணியில் தந்திருந்தார் ராதிகா.

கிழக்கே போகும் ரயில் பாஞ்சாலிக்கும் ‘சுவாதி முத்யம்’ லலிதாவிற்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் காணப்பட்டது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார் ராதிகா.

தெலுங்குத் திரைப்படங்களைத் தாண்டி, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ராதிகாவின் பயணம் விரிவடைந்து கொண்டே சென்றது. 

வெகுளித்தனமும் கம்பீரமும் கலந்த கலவை

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எண்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி ஹீரோயினாகத் திகழ்ந்த ராதிகா, கமல், ரஜினி, விஜயகாந்த், சுதாகர் உள்ளிட்டு பல்வேறு ஹீரோக்களுடன் நடித்து தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தார். வீரம், கம்பீரம் போன்றவற்றைக் கொண்ட பாத்திரங்களில் பிரகாசிக்கும் ராதிகாவால் அதன் எதிர்முனையில் வெள்ளந்தியான பாத்திரங்களிலும் பொருந்திப் போக முடிந்ததை இயல்பாக அமைந்து விட்ட திறமை என்றுதான் சொல்ல வேண்டும். பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக வந்த அதே பெண்ணா, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘ஊர்க்காவலன்; போன்ற படங்களில் வெகுளித்தனமும் அசட்டுத்தனமும் கொண்ட பெண்ணாக நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 

பேர் சொல்லும் பிள்ளை, ஊர்க்காவலன் படங்களில் கமல், ரஜினியுடன் ராதிகா
பேர் சொல்லும் பிள்ளை, ஊர்க்காவலன் படங்களில் கமல், ரஜினியுடன் ராதிகா

அதிகாலை மூன்று மணிக்கு ரஜினிகாந்த்தை எழுப்பி தலைகுளிக்க வைத்து இட்லி சுட்டுத் தந்து “சாப்பிடுங்க.. மாமா.. சாப்பிடுங்க’ என்று வற்புறுத்தும் ‘ஊர்க்காவலன்’ நகைச்சுவைக் காட்சியில் ராதிகாவின் வெள்ளந்தியான நடிப்பையும் குறும்பையும் யாராலும் மறக்க  முடியாது. போலவே, பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில், தன் பின்னாலேயே சுற்றும் மூன்று இளைஞர்களை கையாளும் ராதிகாவின் நடிப்பில் அப்பாவித்தனமும் புத்திசாலித்தனமும் கலந்திருக்கும். 

மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்டி’ திரைப்படத்தில், இந்த குறும்புக்கார முகம் மறைந்து தீவிரமானதொரு நடிப்பு வெளிப்பட்டிருப்பதை பிரமிப்புடன் கவனிக்க முடியும். ரஜினிகாந்த்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்திலும் ராதிகாவின் உணர்ச்சிகரான நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

நல்லவனுக்கு நல்லவன்
நல்லவனுக்கு நல்லவன்

எந்தவொரு பாத்திரத்திலும் பொருந்திப் போகும் அதிசயம்

கிராமத்துப் பாத்திரங்களில் எப்படி கச்சிதமாகப் பொருந்தினாரோ, அப்படியே நவீன நாகரிக மங்கையின் பாத்திரங்களிலும் ராதிகாவின் ஒப்பனையும் தோரணையும் சரியாகப் பொருந்தியது. இதற்கான உதாரணத் திரைப்படங்களாக ‘பிள்ளை நிலா’, ‘ரெட்டைவால் குருவி’ போன்றவற்றைச் சொல்லலாம்.

ரெட்டைவால் குருவி
ரெட்டைவால் குருவி
குறிப்பாக ‘ரெட்டைவால் குருவி’ பாத்திரத்தில் ராதிகாவின் உண்மையான ஆளுமை அப்படியே வெளிப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு இயல்பான நடிப்பைத் தந்திருப்பார்.

இதர ஹீரோக்களைப் போலவே நடிகர் பிரதாப்புடனும் தொடர்ந்து நடித்தார் ராதிகா. பிரதாப் இயக்கத்தில் வெளிவந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தை, ஒரு துணிவான பரிசோதனை முயற்சித் திரைப்படம் எனலாம். மனநலம் குன்றிய ஆணுக்கும் பெண்ணும் இடையில் நிகழும் காதலையும் நேசத்தையும் சித்திரித்த படம். இதில் நாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாது படத்தயாரிப்பிலும் பங்கேற்றார் ராதிகா. இதற்காக அவருக்கு ‘சிறந்த தயாரிப்பாளர்’ என்கிற முறையில் தேசிய விருது கிடைத்தது. 

மீண்டும் ஒரு காதல் கதை - ராதிகா
மீண்டும் ஒரு காதல் கதை - ராதிகா

‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் ராதிகாவின் குரல் மிகவும் குழந்தைத்தனமாகவும் கொச்சையாகவும் இருந்த காரணத்தினால் டப்பிங் குரல் பயன்படுத்தலாம் என்று முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ‘பாஞ்சாலி’ என்கிற அந்த வெகுளியான பாத்திரத்திற்கு மழலைத்தனமான தமிழ் சரியாக இருக்கும் என்று பாரதிராஜா கருதியதால் அப்படியே பயன்படுத்தினார். அது வெற்றியும் அடைந்தது. 

ஆனால் ‘பேபி வாய்ஸ்’ என்று ஆரம்பத்தில் கருதப்பட்ட ராதிகாவின் உச்சரிப்பு, மிகக் குறுகிய காலத்திலேயே முன்னேறி தமிழ் வசனங்களை மிகத் துல்லியமாகவும் உணர்ச்சிகரமாகவும்  உச்சரிக்கும் அளவிற்கு மாறியது.

கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய பல திரைப்படங்களில், நீதிமன்றக் காட்சிகள் உள்ளிட்டு நீளமான வசனங்களளைப் பேசி அசத்தினார் ராதிகா. 

இது மட்டுமல்லாமல், முதல் மரியாதை திரைப்படத்தில் ராதாவிற்காக, விக்ரம் படத்தில் லிசிக்காக, கடலோரக்கவிதையில் ரஞ்சனிக்காக, தன்னுடைய தங்கை நிரோஷா நடித்த சில படங்களுக்காக ‘டப்பிங்’ குரல் தருமளவிற்கு ராதிகாவின் வசன உச்சரிப்பு முன்னேறியிருந்தது. ஆரம்பத்தில் மழலைத்தனமாக கருதப்பட்ட ராதிகாவின் குரல், பல்வேறு வட்டார வழக்குகளை துல்லியமாகப் பேசி நடிக்குமளவிற்கு முன்னேறியதை ஒரு சிறந்த சாதனை என்றே சொல்லலாம். 

ராதிகா
ராதிகா

அதிரடியாகத் தொடர்கிற இரண்டாவது இன்னிங்ஸ்

ஜீன்ஸ்’ திரைப்படத்தில் ராதிகா வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் ‘சுந்தராம்பா’ என்கிற பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பி இன்றளவும் நினைவுகூரக்கூடிய அளவிற்கு அட்டகாசமாக நடித்திருந்தார். ‘வெவரம் கெட்டவனுக்கு பொண்டாட்டியா இருக்கறத விட வேலை தெரிஞ்சவனுக்கு வெப்பாட்டியா இருக்கலாம்’ என்று தாலியைக் கழட்டி  அப்பாவியான கணவனை உதறியெறியக்கூடிய அளவிற்கு வில்லத்தனம் கொண்ட பாத்திரத்தில் ராதிகாவின் நடிப்பு தனி முத்திரையைப் பதிப்பதாக இருந்தது. 

ராதிகாவின் திறமையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட படங்களுள் ஒன்றாக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தைச் சொல்லலாம். வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பிற்கும் காதலுக்கும் இடையில் நிகழ்கிற தத்தளிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கேளடி கண்மணி’ ஜனகராஜ் | “ஒரு கனவு மட்டும் பலிக்கலை...”

வாய் பேச முடியாத, காது கேளாத பெற்றோருடன் உரையாடக்கூடிய அதே சைகை பாஷையில் கோயிலில் கடவுளிடம் இவர் பேசும் காட்சி சிறப்பானதொன்று.

கேளடி கண்மணி
கேளடி கண்மணி

வி.சேகர் இயக்கிய குடும்பச் சித்திர பாணி திரைப்படங்களிலும் ராதிகாவின் நடிப்பு அருமையாக அமைந்திருந்தது.

தென்னிந்திய மொழிகளில் எத்தனையோ படங்களில் நாயகியாக நடித்த ராதிகாவிற்கு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தது ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம் எனலாம். நாயகி என்கிற நிலையிலிருந்து நகர்ந்து சிறந்த துணை நடிகராக உருமாறிய காலக்கட்டம் இது.

கிழக்குச் சீமையிலே
கிழக்குச் சீமையிலே

குழந்தை பெற்று ஓய்வில் இருந்த ராதிகாவை, மருத்துவமனையில் சந்தித்த பாரதிராஜா, “உனக்காகவே ஒரு கேரக்டர் எழுதியிருக்கேன். சீக்கிரம் எழுந்து வா” என்று வத்தலக்குண்டுவிற்கு அள்ளிச் சென்று ‘விருமாயி’ பாத்திரத்தில் நடிக்க வைத்தார். பாசமலர் சிவாஜி-சாவித்திரிக்குப் பிறகு மக்கள் நினைவுகூரக்கூடிய அளவிற்கு உருக்கமான அண்ணன்-தங்கை பாத்திரமாக இது அமைந்தது. 

முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ராதிகா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோருடன் இணைந்து பல மறக்க முடியாத குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சளைக்காமல் தொடரும் இந்தப் பயணம், அவரிடம் இருக்கும் பிரமிக்கத்தக்க உழைப்பையும் நடிப்பின் மீதுள்ள தீராத காதலையும் வெளிப்படுத்துகிறது. 

ராதிகா
ராதிகா

சின்னத் திரையின் ராணி - இன்னொரு பரிமாணம்

ராதிகாவின் இன்னொரு முக்கியமான பரிமாணம் தொலைக்காட்சித் தொடர்கள்.

இதன் முக்கியத்துவத்தை நெடுங்காலத்திற்கு முன்பே யூகித்த  ராதிகா, தொடர்களைத் தயாரிப்பதற்கு ஒரு தனியான நிறுவனத்தைத் துவங்கினார். சினிமாவைப் போலவே ஆணாதிக்கம் மிகுந்த இந்தத் துறையில் ராதிகாவின் பயணம் ஆரம்பத்தில் அத்தனை எளிதாக அமையவில்லை. வீழ்ச்சிகள், தோல்விகள், பின்னடைவுகள் துரத்தி வந்தன. ஆனால் அவற்றில் சோர்ந்து அமர்ந்து விடாமல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த அந்த உழைப்புதான்

‘சின்னத்திரையின் ராணி’

என்கிற அளவிற்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

ராதிகா சரத்குமார் பிறந்தநாள்
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தயாரித்த ராதிகாவிற்கு, ‘சித்தி’ என்னும் சீரியல் மிகுந்த புகழைத் தேடித் தந்தது. தயாரிப்பிற்காகவும் நடிப்பிற்காகவும் வெகுவான பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு திரும்பிப் பார்க்க நேரமில்லை. பல்வேறு தொடர்களை தயாரித்து நடிப்பதோடு, டிவி ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள், நேர்காணல்கள் ஆகியவற்றிலும் இடையறாது பங்கேற்றுக் கொண்டிருப்பது அவருக்கு இருக்கும் நேர மேலாண்மையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. 

ராதிகா
ராதிகா

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சினிமா, டிவி, அரசியல் என்று துறை சார்ந்தும் சரி, பல்வேறு வீழ்ச்சிகளை, தோல்விகளை, விமர்சனங்களை எதிர்கொண்டாலும் சோர்ந்து அமர்ந்து விடாமல் தொடர்ந்து போராடி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ராதிகா, ஜெயிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார் என்றால் மிகையாகாது. 

அறுபது வயதைக் கடந்தும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ராதிகா, நடிகை என்பதைத் தாண்டி சிறந்த பெண்மணி என்பதின் அடையாளமாக தன்னை மாற்றிக் கொண்டிருப்பதற்குப் பின்னால் ஏராளமான உழைப்பு இருக்கிறது.

ராதிகா
ராதிகா
‘பெண் சிவாஜி’ என்று அடைமொழி கிடைக்குமளவிற்கு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருக்கும் ராதிகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.!

“இந்தப் பொண்ணா.. ஹீரோயின்?” என்று யாரையும் எளிதில் எடை போட்டு தீர்ப்பு சொல்லி விட முடியாது என்பதற்கான சிறந்த விடை - நடிகை ராதிகா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com