தெலங்கானா மாநிலம் தோரூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கசம் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகை பிரியங்கா மோகன் அழைக்கப்பட்டிருந்தார். திறப்பு விழாவிற்கு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஹனுமண்டலா ஜான்சி ரெட்டி உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் மேடையில் பிரியங்கா பேசிக்கொண்டிருந்தபோதே மேடை திடீரென சரிந்தது. மேடையில் அதிகமானோர் இருந்தது மேடையின் சரிவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை. இதுதொடர்பாக நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தளத்தில், “இன்று தோரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறிய விபத்து ஏற்பட்டது. நான் நலமாக இருக்கிறேன். நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் நான் தப்பித்தேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்திக்கிறேன். அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். நிகழ்வில் கலந்துகொண்ட ஜான்சி ரெட்டி சிறிதளவு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேடை சரிந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.