’நிஜத்திலும் துணிச்சலானவர்’: ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

’நிஜத்திலும் துணிச்சலானவர்’: ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்
’நிஜத்திலும் துணிச்சலானவர்’: ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்
Published on

நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார்.

’ஒருநாள் கூத்து’, ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ’டிக் டிக் டிக்’, ’திமிரு பிடிச்சவன்’ என தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். ஏற்கனவே, இவர் ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. ’திமிரு பிடிச்சவன்’ படத்தில் துணிச்சலான காவலராக நடித்து கவனம் ஈர்த்தார். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் துணிச்சலானவர்தான் என்பதை தற்போது நிரூபிக்கும் விதமாக ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் பேசும்போது,

”கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன்.

அரேபிய நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய வி6 எஞ்சின் இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கையுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது.

நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில மோட்டார் ட்ராக்ஸ்களை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்வையொட்டி, பி.எம்.டபிள்யூ நிறுவனம் நடத்திய, அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபோது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது. கோயம்புத்தூரில் உள்ள ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங்கிற்கு எனது சகோதரருடன் சென்றபோது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமா ? எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன்.

ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள் அதில் ஒரே பெண் நான் தான். ட்ராக்ஸில் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது.

இது மோட்டார் விளையாட்டுகள் ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்கிற மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. நாகரிகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான ஃபார்முலா ஒன் மற்றும் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்ஸ் நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com