சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நடிகை நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகியுள்ள அறம் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்தார்.
கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள அறம் திரைப்படம் நேற்று வெளியானது. அதில் நயன்தாரா புதிய தோற்றத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'அறம்' படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கம் வந்த அவர், சுமார் 10 நிமிடங்கள் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்னர் அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்கம் சென்ற நயன்தாரா, அங்கும் 10 நிமிடங்கள் வரை ரசிகர்களுடன் படம் பார்த்தார். நயன்தாராவின் வருகையை எதிர்பாராத ரசிகர்கள், அவரைக் கண்டவுடன் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர்.