நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ‘ நானும் ரௌடிதான்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் பழக்கம் உருவானது.
நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸில் வெளியிட 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது..
மேலும், திருமணத்திற்கு முந்தைய தினத்தின்போது கடற்கரையில் நடத்திய ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அப்போது, விரைவில் திருமண வீடியோவை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்தவகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படமான 'NAYANTHARA BEYOND THE FAIRLYTALE' வருகின்ற நவம்பர் 18ம் தேதி அதாவது நயன்தாராவின் பிறந்தநாளன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் தனது சமுக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ பதிவினை வெளியிட்டுள்ளது..
இது குறித்த பதிவில், ”ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், அவர் தான் பிரகாசமான நட்சத்திரம் , லேடி சூப்பர் ஸ்டாரையும் அவரது நட்சத்திர பயணத்தையும் 'நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற ஆவணப்படத்தை நவம்பர் 18 அன்று நெட்ஃபிளிக்ஸில் மட்டும் பாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளது.
இதனால், நயன்தாரா, விக்னேஷ் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.