ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற படத்தொகுப்பாளர் ராஜா முகமதுவும் பணியாற்றுகிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுகமாகிறார் கீதா ராஜ்புத்.
படத்தைப் பற்றி கீதா ராஜ்புத் கூறியது ‘எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜானரில் உருவாகும் திரைப்படம் இது. இதில் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.
இயக்குநர் கீதா ராஜ்புத், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.