தேசிய விருது படம் ’ரோஜா’ புகழ் நடிகை மதுபாலா தனது முதல் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பதை செய்தித்தாள் மூலம்தான் தெரிந்துகொண்டேன் என்று தற்போது வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையானவர் நடிகை மதுபாலா. இவர், மம்முட்டியுடன் முதன்முதலில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு அழகன் படத்தில் தமிழில் அறிமுகமானார். அதற்கடுத்து 1992-ஆம் ஆண்டு மணிரத்னத்தின் தேசிய விருது பெற்ற ரோஜா படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அதன்பிறகு, 1993 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் படத்தில் நடித்து தமிழின் முன்னணி நடிகையானார். இவ்வளவு வெற்றிகளை குவித்தபோதும் அவரது மனதில் ஆறாத்துயரம் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனை, சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
”நான் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது முதன்முறையாக ஒரு படத்தில் ஒப்பந்தமானேன். 4 நாட்கள் ஷூட்டிங்கும் போனது. ஆனால், திடீரென அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பதை செய்தித்தாள்களில் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. ஒரு படத்தில் ஒப்பந்தமாகி வெளியேற்றப்பட்டால் வலி வேதனை என்ன என்பது அவரவர்களுக்குத்தான் தெரியும். நண்பர்களும் குடும்பத்தினரும் என்ன நினைப்பார்கள் என்ற வேதனை வேறு இருந்தது. ஆனால், அந்த வலி வேதனைதான் என்னை முன்னணி நடிகையாக்கியது. வெறித்தனமாக கடுமையாக நாம் இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று உழைத்தேன். வெற்றியும் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், கடைசிவரை அது எந்தப் படம், எந்த தயாரிப்பு நிறுவனம் என்று எதையும் மதுபாலா சொல்லவில்லை.
நடிகை மதுபாலா முதன்முதலில் மலையாளப் படத்தில்தான் அறிமுகமானார். அதன்பிறகுதான், இந்தியில் அஜய் தேவ்கானுடன் பூல் ஒளர் காண்ட்டே படத்தில் அறிமுகமானார். அது அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதற்கடுத்தடுத்து மம்முட்டி, அர்ஜூன், அக்ஷய் குமார், பிரபுதேவா,ஜிதேந்திரா,ஜாக்கி ஷெராஃப், கோவிந்தா, சயிஃப் அலிகான் என முன்னணி நடிகர்களுன் நடித்தார்