பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிவரும் புதியப் படத்திற்கு ‘செம்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளநிலையில், நடிகை கோவை சரளா மிரட்டலான கதாபாத்திரத்தில் தோன்றக்கூடிய வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘லீ’, ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர், தற்போது புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 1985-ம் ஆண்டு மாடல் கொண்ட பழையப் பேருந்து ஒன்று இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே இந்தப் படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அதன்படி, ‘செம்பி’ என்று இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் இசையமைப்பிற்காக முதன்முறையாக நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.