இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தியமான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’. 2014-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரிந்தபோது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.
’அமரன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் மனந்திறந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் படத்தைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ ‘அமரன்’ படக்குழுவினருக்கு சல்யூட். ’ஜெய்பீமு’க்குப் பின் தமிழின் உன்னதமான திரைப்படம் ’அமரன்’. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் வைரத்தைப் படைத்திருக்கிறீர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இக்கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்ததை நினைத்துப் பார்க்க முடிகிறது. சாய் பல்லவி என்னவொரு நடிகை? கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தைப் உலுக்கிவிட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும் நேர்மறையான எண்ணமும் எங்களின் இதயங்களைத் தொட்டுவிட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்; உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவின் இந்த வாழ்த்துக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட ’அமரன்’ படக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நடிகர் சூர்யாவும் இப்படத்தைப் பார்த்துவிட்டு, படக் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். அவர், ” ‘அமரன்' படத்தின் மூலம் மேஜர் முகுந்த் மற்றும் ரெபேக்கா ஆகியோருடைய நிஜ வாழ்க்கையைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தில் எல்லோரும் தங்கள் இதயத்தின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பதைக் காண முடிந்தது. படத்தின் வெற்றிக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.