”அஜித் சாருடன் ‘பில்லா 2’ படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது: ஆனால்?”: ஹூமா குரேஷி
’வலிமை’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள ‘வலிமை’ நாளை வெளியாவதையொட்டி ஹூமா குரேஷி மனம் திறந்துள்ளார். அவர் பேசும்போது,
“வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்துக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் வினோத் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், நாங்கள் ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
குறிப்பாக, எனது கதாபாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. அஜித் சாரின் ’பில்லா 2’ படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. ’வலிமை’ படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. ’வலிமை’ படத்தில் அஜித்துடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்” என்று உற்சாகமுடன் கூறியுள்ளார்.