பாலியல் துன்புறுத்தல்|“முயலுக்கு மூன்று கால் என சினிமா துறையை மட்டும் பிடித்துக்கொள்வது ஏன்?”-குஷ்பு

“எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அது எதிலும் கேள்வி கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள். அது ஏன்?” என குஷ்பு கேள்வி!
குஷ்பு
குஷ்புமுகநூல்
Published on

செய்தியாளர்: விக்னேஷ் முத்து

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பெண் சக்தி இயக்கம் நடத்தும் ‘மகளிர் தர்பார்: பெண்ணால் முடியும் வாருங்கள்’ என்ற விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் மற்றும் பாஜக தலைவர் குஷ்பு சுந்தர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மற்றும் மூத்த மருத்துவர் சுதா ஷேசையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம், மலையாள உலகில் பூதாகாரமாகியுள்ள பாலியல் தொல்லை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

“எனக்கு அந்த சம்பவம் (பாலியல் அத்துமீறல்) போல் சினிமா துறையில் எதுவும் நடந்ததில்லை. நான் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறேன். மட்டுமன்றி, நாட்டிலுள்ள எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகின்றன. அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்.

ஆனால், அது எதிலும் கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள் சிலர். அது ஏன்?

ஏன் சினிமாவில் மட்டும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்? பெண்கள் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு துறையிலும் ஹேமா கமிட்டி போல் இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

‘தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி’ என தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு பாதுகாப்பு குழு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை வந்து புகார் தெரிவிக்கவில்லை. அவர்களை யார் தடுக்கிறாராகள்?

ஒரு நடிகை வந்து ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் போது யாராக இருந்தாலும் முதலில் அந்த நடிகருக்கு எச்சரிக்கை விடப்படும். அதன் பிறகு விசாரணை கமிட்டி அமைத்து தொடர்ந்து பேசப்படும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமாக ஏழு தீர்மானங்கள் உள்ளன. எங்களிடம் வந்து பேசுங்கள். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் உள்ளோம்.

இதற்காகதான் விசாகா கமிட்டி மற்றும் நடிகர் சங்கம் உள்ளது. இல்லை என்றால் மாநில ஆணையத்திடம் சென்று புகார் அளிக்கலாம்” என்றார்.

குஷ்பு
சென்னை | வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com