நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூறும்போது, நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றனர்.
அவர்கள் மேலும் கூறும்போது, ‘’இது மாதாமாதம் நடக்கும் செயற்குழுதான். அவசர கூட்டமில்லை. நாங்கள் பதவிக்கு வந்த போது அறிவித்தவற்றை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி விட்டோம். கட்டிடமும் முடியும் தருவாயில் இருக்கிறது.நாங்கள் பொறுப்புக்கு வரும்போது குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்றுதான் முதல் நாளில் இருந்தே வேலையை தொடங்கினோம். சட்டப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கால தாமதத்தால் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.
அதற்கான வேலைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்பார்வையில் அது தொடர்ந்து நடக்கும். நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேலைகள் நாளை முதல் தொடங்குகிறது. தேர்தலில் நாங்கள் கண்டிப்பாகப் போட்டியிடுவோம். விஷால் போட்டியிடுவாரா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது’’ என்றனர்.