மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு அழைப்பதற்காக, நடிகர் அஜீத்குமாரை சந்திக்கக் கூட முடியாதது வருத்தமானது என்று தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கான பணியை, நடிகர் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்கான நிதி திரட்டும் பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, கடந்த 6ஆம் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உட்பட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். ஆனால் விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, சந்தானம், அரவிந்த்சாமி, சிபிராஜ், ஜெய் உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பியும் எந்தவித காரணமும் இன்றி அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய், விழாக்களுக்கு வருவதில்லை என்றும் வேறுவிதமாக நடிகர் சங்க நிதிக்கு பங்களிப்பதாவும் தெரிவித்துள்ளார். ஆனால், சிம்பு, சந்தானம், அரவிந்த்சாமி, ஜெய், தனுஷ் ஆகியோர் ஷூட்டிங் இல்லாமல் இருந்தும் மலேசியாவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி நடிகர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுபற்றி நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘நடிகர், நடிகைகள் அனைவரையும் மலேசிய நட்சத்திர கலைவிழாவுக்கு அழைத்தோம். சிலர் வர முடியாத காரணத்தைத் தெரிவித்தனர். பலர் எதுவும் சொல்லாமல் கலந்துகொள்ளவில்லை. தனிப்பட்ட விழாக்களில் கூட கலந்துகொள்ள வேண்டாம். நடிகர்களுக்கான சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்டும் விழா இது. இதில் கூட சக நடிகர்களுடன் கலந்துகொள்ளவில்லை என்றால் எப்படி என்று தெரியவில்லை. அதோடு நடிகர் அஜீத்தை சந்தித்து பேசக் கூட எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர், அங்கிருக்கிறார், இங்கிருக்கிறார் என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருந்தார்கள்’ என்றார்.
’கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று கேட்டதற்கு, அதுபற்றி முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.