நடிகர் யோகிபாபு, நடிகை கேத்ரின் தெரசா ஆகியோரிடம் கால்ஷீட் வாங்கித்தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் போஸ். இவரது நண்பர் ரவிச்சந்திரன். சினிமா தயாரிப்பாளர்களான இவர்கள் ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ என்ற பெயரில் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை கேத்ரின் தெரசா ஆகியோரை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.
அவர்களின் கால்ஷீட் பெறுவதற்காக சினிமா துறையில் அறிமுகமான வடபழனி என்.ஜி.ஓ. காலனியில் அலுவலகம் நடத்தி வரும் சினிமா பிரமுகர் அண்ணாதுரையை தயாரிப்பாளர்களான போஸ், ரவிச்சந்திரன் அணுகி உள்ளார். அதற்காக அண்ணாதுரை, ‘இருவரின் கால்ஷீட் வாங்குவதற்கு ரூ.30 லட்சம் வரை பணம் தேவைப்படும்’ என்று கூறியதாக தெரிகிறது.
முதல்கட்டமாக ரூ.10 லட்சம் தரும்படியும் கேட்டுள்ளார். அண்ணாதுரை அலுவலகத்தில் வைத்து ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தயாரிப்பாளர்கள் இருவரும் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட அண்ணாதுரை இதுவரை நடிகர்களின் கால்ஷீட் வாங்கி கொடுக்காமலும் பணத்தையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த போஸ் வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.