விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்ட உற்சாகத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், புதிய தலைமுறை டிஜிட்டலுக்காகப் பிரத்யேகமாகப் பேசினார்.
கேள்வி : நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் இந்தக் கதையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில் : ”இயக்குநர் மனு ஆனந்த் கெளதம் மேனனிடம் பணிபுரிந்தவர். நண்பர் மூலம் அறிமுகமாகி என்னிடம் கதை சொன்னார். அவர் முதலில் சொன்னக் கதையை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால், அவர் கதை சொல்லும் விதம் பிடித்திருந்ததால், ’வேறு ஏதாவது ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறீர்களா?’ என்றேன். 20 நிமிடத்தில் வேறு கதை ஒன்றை சொன்னார். உடனே ஓகே சொல்லிவிட்டேன். அந்தக் கதைதான் ‘எஃப்.ஐ.ஆர்’.
நான் நினைத்தது எல்லாமே இந்தக் கதையில் இருந்தது. மனு சர்ப்ரைஸ் ஆகிவிட்டார். ’எஃப்.ஐ.ஆர்’ தொடங்கும்போதே சிலக் காரணங்களால் தயாரிப்பாளர் நிறுத்திவிட்டார். இதேபோல, ’ராட்சசன்’ வெற்றிக்குப்பிறகு பிறகு 8 படங்கள் கமிட் ஆனேன். அத்தனைப் படங்களுமே கைவிட்டுப் போனது. அந்த வரிசையில் ‘எஃப்.ஐ.ஆர்’ ஒன்பதாவது படம். ’ராட்சசன்’ படத்திற்கு முன்பே ’காடன்’ தொடங்கப்பட்டது. ராட்சசனுக்குப் பிறகு வெளியாகும் முதல் படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இந்தப் படமும் கையைவிட்டுப் போனபோது, பயங்கர கோபம் வந்துவிட்டது.
மனு என்னிடம் வந்து ’எனக்காக காத்திருக்காதீர்கள் சார். வேறு படம் தேடப்போகிறேன்’ என்றார். அவர் சொன்ன உண்மை பிடித்தது. அவர் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதால் இப்படத்தை நானே தயாரிக்க முன்வந்தேன். நான் நடிகன் எனக்கு அடுத்தப்படம் கிடைக்கும். ஆனால், ஒரு இயக்குநரின் முதல் படமே நிறுத்தப்பட்டால் லக் இல்லை என்பார்கள். முதல் பட வாய்ப்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம். எனக்கும் அந்த சூழல் வந்திருக்கிறது. மனு வாய்ப்புக்காக அமந்திருக்கும் அந்த சோபாவில் நான் என்னைப் பார்ப்பேன். ஆறு வருடம் நிறைய ஆபிஸ், நிறைய இயக்குநர்களைப் போய் வாய்ப்புக்காக நானே சந்தித்திருக்கிறேன்”.
கேள்வி : ஊரடங்கிற்குப் பிறகு படத்தை தியேட்டரில் வெளியிடுவது எப்படி உள்ளது?
பதில் : ”தியேட்டர் எப்போதும் அழியாது. அது ஒருவிதமான எக்ஸ்பீரியன்ஸ். உணவு ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுகிறோம். ஸ்விக்கி வந்ததால் நாம் ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடுவது குறைந்திருக்கிறதா என்ன? குடும்பத்தோடுப் ரெஸ்டாரண்ட் போய் சுற்றி எல்லோரும் சாப்பிடும்போது நாமும் சுடச்சுட சாப்பிடுவது மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படித்தான், தியேட்டரில் 1000 பேருடன் படம் பார்ப்பது ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ். ஆனால், ஓடிடியால் இப்போ டிஜிட்டல் ரைட்ஸ் பிசினஸ் அதிகரிச்சிருக்கு. தியேட்டர் வருவதற்கு முன்பே நான் போட்டப் பணத்தை எடுத்துவிட்டேன்”.
கேள்வி : உங்கள் நெருங்கிய நண்பர் உதயநிதி எப்படி இந்தக் கதையை தயாரிக்க முன்வந்தார்?
பதில் : “உதயநிதி நெருங்கிய நண்பர் என்பதால், இந்தப் படத்தை வழங்குகிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர் அப்படிக் கிடையாது. படம் பிடித்திருந்தால் மட்டும்தான் வழங்குவார். அதேபோல, என் படம் ஒர்த்தாக இருந்தால் மட்டும்தான் அவரிடம் கேட்பேன். சினிமா ஒரு பிசினஸ். உதயநிதி பெயரை எங்கேயும் மிஸ்யூஸ் பண்ணக்கூடாதுன்னு நான் க்ளியரா இருப்பேன்.
’எஃப்.ஐ.ஆர்’ பார்த்துவிட்டு ‘பெரிய படம்டா. இப்போ, கொரோனா சூழல். மூன்றாவது அலை வருகிறது. ஊரடங்கு எல்லாம் இருக்கு. எப்போ பண்ண முடியும்னு தெரியலை. உனக்கு பணப் பிரச்சனை எதும் இல்லையே’ என்றார். நான் ”அப்படி எதுவும் இல்லை. மே, ஜூன் வரை காத்திருக்க ரெடியா இருக்கேன்” என்றேன். அப்படித்தான், காத்திருந்தேன். திடீர்னு ஒரு தேதி கிடைத்தது. கடந்த 12 நாட்களாக தூங்காமல் எங்கள் குழுவினர் வேலை செய்தோம். தற்போது, பல மொழிகளில் வெளியாகிவிட்டது” .
கேள்வி : வாழ்க்கையின் கஷ்டமான சூழல்களைக் எப்படி கடந்தீர்கள்?
பதில் : “சுயபரிசோதனை மிகவும் முக்கியம். முதலில் உங்களுக்குள்தான் வரவேண்டும். இரண்டாவதாக சரி தவறை சொல்லிக்கொடுக்க உங்களைச் சுற்றி சரியானவர்கள் இருந்தாலே எந்தப் பிரச்சனையையும் நாம் கடந்துவிடலாம். பிரச்சனை எந்த நிலையிலும் வரலாம். அந்தப் பிரச்சனையை சரி செய்ய உங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்”.