தமிழக அரசு திரைத்துறை சம்மந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என நம்புவதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளின் டிக்கெட் விலை, டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல் இருக்கிறது. அத்துடன் படப்பிடிப்புக்கள் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அண்மையில் பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பெப்சி சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட போதும், தமிழக அரசிடம் தான் முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நன்றி என விஷால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். திரைத்துறை சம்மந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.