இயக்குநர் ஷங்கருடன் இணைந்த ’ஐ’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் ஒரு ஹிட் படத்தை கொடுக்க நீண்டகாலமாக போராடி வந்தார். கடைசியாக வந்த பொன்னியின் செல்வன் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், அது விக்ரமின் தனித்த படமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
சாமி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த விக்ரமிடம், உங்களுக்கு ஏன் விஜய், அஜித்தை போல அதிக ரசிகர்கள் இல்லை, டாப் 3-ல் நீங்கள் ஏன் இல்லை என்ற கேள்விகள் சமீபத்தில் வைக்கப்பட்டன. அதைப்பார்த்த ரசிகர்கள் ’அவர்தான் நடிப்புல நம்பர்1, அவரை போல நடிக்க யார் இருக்கா?’ என்ற ஆதங்கத்தை வைத்தனர். உடன் அவருக்கான வெற்றி தங்கலான் படம் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.
ஒவ்வொரு விக்ரம் படத்திற்கு பிறகும் ’உசுர கொடுத்து வேலை பார்க்குறாரு’ என்ற கருத்தை ஒவ்வொரு இயக்குநரும் வைப்பது போல, தங்கலான் படத்தில் விக்ரம் சாரை நான் ரொம்ப கொடுமைபடுத்திட்டேன், உயிரை கொடுத்து நடிச்சாருனு பா.ரஞ்சித் சொன்னதும் சாதாரணமானது என்றுதான் நினைக்க தோன்றியது.
ஆனால் தங்கலான் படம் முழுவதிலும் எந்தளவு உடல் உழைப்பை போட்டு நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது, ’உண்மையாவே உசுர கொடுத்துதான் பா நடிச்சிருக்காரு’ என படம் பார்த்த ஒவ்வொரு ரசிகருக்கும் தோன்றுமளவு தரமான நடிப்பை விக்ரம் கொடுத்துள்ளார்.
முதலில் கலவையான விமர்சனத்தை தங்கலான் எதிர்கொண்டாலும், தற்போது ரசிகர்கள் படத்தை அதிகப்படியாக வரவேற்க தொடங்கியுள்ளனர். அதனால் படக்குழு நன்றி தெரிவிக்கும் விழா மூலம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகின் மற்றொரு வசீகரிக்கும் சினிமா படைப்பாக தங்கலான் உருவெடுத்துள்ளது. படத்தில் எடிட்டிங்கில் குறைகள் இருந்தாலும், படத்தை சொன்ன விதமும், அதன் சாராம்சமும் படத்தை பற்றி எல்லோரையும் பேச வைத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோலார் தங்க வயலின் (KGF) தொடக்கம் எங்கிருந்து தொடங்கியது என்பதில் தொடங்கி, மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் தங்க ஆசை, அதைத்தொடர்ந்து எப்படி மக்கள் அதற்காக வேலைவாங்கப்பட்டனர் என்பது வரை ஒரு டாக்குமெண்ட்ரி சொல்லுமளவு பா ரஞ்சித் படத்திற்காக தகவல்களை சேகரித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் சாமர்த்தியமான கதைசொல்லலும், சீயான் விக்ரமின் பவர்ஃபுல் நடிப்பும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய த்ரில்லர் டிராவல் திரைப்படத்தை கொடுத்துள்ளது. படத்தை அதிகப்படியாக மக்கள் வரவேற்றதை தொடர்ந்து ஹைதராபாத்தில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை படக்குழு நடத்தியது.
நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய விக்ரம், “உங்களுக்கு தங்கலான் படம் மிகவும் பிடித்திருப்பதால் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான், ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித் மூவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம், விரைவில் ‘தங்கலான்’ இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
வெளியாகியிருக்கும் தகவலின் படி 2 நாட்களில் 43கோடி வசூலை தங்கலான் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 30-ம் தேதி நாட்டின் ஹிந்தி பேசும் பகுதிகளில் வெளியாக உள்ளது.