நடிகர் விஜய் தனது புதிய படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக நடிகர் சாந்தனு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சக தொழிலில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்து ஊக்குவிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் தற்போது நடிகர் சாந்தனு புதிதாக கமிட் ஆகியிருக்கும் இராவணக்கோட்டம் என்ற படத்திற்கு விஜய் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இந்த படத்தை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது புதிய படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக நடிகர் சாந்தனு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துகள் நண்பா, தலைப்பு செம்ம, காலையில் முதல் வேலையாக இந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளன. மெர்சல் ஆகிட்டேன். உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி விஜய் அண்ணா” என்று கூறியுள்ளார்.
சர்கார் பட கதை திருட்டு விவகாரத்தில் ‘சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்’ என்றும் நடிகர் சாந்தனு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.