’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காகப் பெற்ற தேசிய விருதை, அப்படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் அளித்து வாழ்த்து பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மத்திய அரசால் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்றது. அதில், நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ‘ஷில்பா’ என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கிடைத்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து விருதை அளித்து வாழ்த்து பெற்றார். தியாகராஜன் குமாரராஜாவும் விஜய் சேதுபதிக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் கூறி மீண்டும் தேசியவிருதை அணிவித்து மகிழ்ந்தார். இந்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.