விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகியுள்ள The GOAT திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசீகரா Pair ஆன சினேகா ஜோடியாக நடித்துள்ள நிலையில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, லைலா என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தீவிர அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு இது கடைசி படத்துக்கும் முந்தைய படமாக இருப்பதால், கொண்டாட்டமாகவே எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அறிவித்தபடி படம் கடந்து 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில், முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலை வாரியது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதன்பின் விநாயகர் சதுர்த்தி என வார விடுமுறை நாட்களிலும் பார்வையாளர்கள் கூட்டம் குறையவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தெலுங்கி பேசும் மாநிலங்களில் சறுக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது The GOAT.
இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதற்கு பிறகு அமைதிகாத்து வந்தது. இதற்கிடையேதான், 4 நாட்கள் வசூலை இன்று வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அந்த வகையில், உலகம் முழுவதும் மொத்தமாக 288 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது The GOAT திரைப்படம்.
நடப்பு ஆண்டிலேயே மிகப்பெரிய ஓபனிங் கொண்ட படமாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு வார வேலை நாளான இன்றும் கிட்டத்தட்ட ஹவுஸ் ஃபுல் ஆகவே இருக்கிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், முதல் நாளில் 148 கோடி ரூபாயும், 7 நாட்களில் 450 கோடி ரூபாயும் வசூலித்தது. இப்போது வெளியாகியுள்ள கோட் படத்திற்கு துவக்கத்திலேயே திட்டமிட்டு பொய்யான விமர்சனம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆன்லைனில் பழைய பட விமர்சனங்கள் பரப்பப்பட்டாலும், தியேட்டர்களுக்கு செல்வோர் ஹாப்பி அண்ணாச்சி மொமண்ட்டில்தான் இருக்கின்றனர். இதுவரை பெற்றுள்ள வசூல் என்று பார்த்தாலும், நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக பார்த்தாலும் முன்வரிசையில், முதல் இடத்தை பிடித்துள்ளது The GOAT.