’மெர்சல்’, ‘விஸ்வாசம்’ படங்கள் விரைவில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளன.
பான் இந்தியா படங்கள் வரவேற்பை பெற்று வருவதால் நடிகர் விஜய்யின் ‘மெர்சல்’ அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டரில் வெளியாகவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்ததால், முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர் மனிஷ் ஷா முடிவு செய்துள்ளார்.
‘புஷ்பா’ வெற்றியால் அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரம் லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து வரும் ஜனவரி 26-ஆம் தேதி தியேட்டரில் வெளியிடுகின்றனர். இதனைத்தொடர்ந்து, ராம் சரணின் ‘ரங்கஸ்தலம்’ வரும் பிப்ரவரி மாதமும், தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்களை அடுத்தடுத்தும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றியால் பான் இந்தியா படங்களில் நடிகர்கள் ஆர்வம் காட்டி நடித்து வருகின்றனர். தமிழில் விஜய் , தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் பான் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டனர். ‘விஜய் 66’ படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பான் இந்தியா படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ‘வலிமை’ மலையாளம், இந்தி, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.