கர்நாடகா: கோலார் தமிழ் மக்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.
நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அதிக தமிழர்கள் வசிக்கிறார்கள். கோலார் தங்க வயலான கேஜிஎஃப்பில் பணிபுரிய அந்தக் காலத்திலேயே நம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர் என்பது வரலாறு. அப்படி சென்ற குடும்பங்கள் இப்போதும் கோலாரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கோலார் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 200 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் ஏழைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி, கிருமி நாசினி தெளிப்பு போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகாவிலும் தமிழர்களுக்கு உதவி செய்துள்ளது பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பேனா, நோட்புக் வழங்கியதோடு ஏழைகளுக்கு உணவும் அளித்துள்ளனர்.