இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜயின் காம்போவில் தயாராகிவரும் திரைப்படம் G.O.A.T. (கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்). நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கடைசி இரண்டு படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடைசி படத்திற்கு முந்தைய படமான G.O.A.T. மீது ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடைபெற்றுவருகின்றன.
கடந்த 2010ஆம் ஆண்டு காவலன் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற விஜய், அதன்பின் எந்த படப்பிடிப்புக்கும் அங்கு செல்லவில்லை. காவலன் படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் G.O.A.T. படத்தின் படப்பிடிப்புக்காக, 14 ஆண்டுகள் கழித்து கேரளா சென்றுள்ளார்.
நடிகர் விஜய் கேரளா வருவதை தெரிந்துகொண்ட கேரளா விஜய் ரசிகர்கள், திருவனந்தபுரம் மைதானத்தில் குவிந்தனர். விஜய் மீது கொண்ட அன்பை அவர்கள் ஆர்ப்பரித்து வெளிப்படுத்தியதை பார்த்த விஜய் நெகிழ்ந்தார். தொடர்ந்து அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடிய காரணத்தால், திருவனந்தபுரமே ஸ்தம்பித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று குவியும் ரசிகர்கள், விஜயை மகிழ்ச்சி ஆழ்த்திவருகின்றனர்.
கேரளா ரசிகர்களின் அதிகப்படியான அன்பை பார்த்த நடிகர் விஜய், தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசிவருகிறார். அந்தவகையில் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கும் விஜய், தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி என எமோஷனலாக பேசியுள்ளார்.
ரசிகர்கள் சந்திப்பில் பேசிய விஜய், “ உங்க அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் பத்தாது, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்க விஜய் தான். தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு என்னோட ரெண்டு கண்கள் மாதிரி. எனக்கு ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருக்கு, இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டு புள்ளையா பார்த்துட்டு இருக்கிங்க, ரொம்ப நன்றி” என்று எமோசனலாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இத்தனை வருஷத்துல கேரளாவைச் சேர்ந்த 16 மாவட்ட குழு தலைவர்கள் என்னோட travel பண்ணிருக்காங்க. அவங்களோடு சேர்ந்து எத்தனையோ நண்பர்கள், நண்பிகள் ஒன்னா சேர்ந்து எவ்வளவோ நல்ல திட்டங்கள், எத்தனையோ உதவிகள் செய்திருக்காங்க. இதுஎல்லாவற்றையும் மீறி உடம்புல இருக்க ரத்தத்தை கூட தானமா குடுத்துருக்காங்க. அவங்க எல்லாருக்கும் என்னுடைய பெரிய பெரிய நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். இப்டியே தொடர்ந்து எல்லாருக்கும் உங்களால முடிஞ்சவரை உதவி செய்யுங்க” என்று பேசினார்.