நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் அரசியலில் முழுமையாக இறங்குவதற்குள் நடிகர் விஜய் கடைசியாக 2 படங்களில் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் GOAT (THE GREATEST OF ALL TIME) திரையரங்கில் வசூல்வேட்டை நடத்திவருகிறது.
நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, த்ரிஷா (கேமியோ), தோனி மற்றும் தல அஜித் ரெஃபரன்ஸ் என GOAT படமானது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக விஜயை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
GOAT படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் கடைசிபடமான 69-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் எப்போதும் அவருடைய படங்களில் ஏதாவது மக்களுக்கு தேவையான கருத்துகளை வைத்து படமாக்குவதை தொடர்ச்சியாக செய்துவருகிறார். அவரைபோலவே நடிகர் விஜய்யும் தன்னுடைய படங்களில் சமூக கருத்துகளை பேசுவதை வழக்கமாக கொண்டுவருவதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் சேரும் படத்தில் எந்தமாதிரியான சமூக கருத்து இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் விஜய்யின் 69வது படம் அரசியல் பேசும் படமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த இயக்குநர் ஹெச்.வினோத், அரசியல் படமாக இருக்காது, ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும்படியான கமர்சியல் படமாகவும், அதில் சின்ன சமூக கருத்து இடம்பெற்றிருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிலேயே “ ஜனநாயத்தின் தீபம் ஏற்றுபவர் (The torch bearer of Democracy)" என்ற டேக்லைனுடன் படத்தின் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பில், “ஜனநாயத்தின் தீபம் ஏற்றுபவர் 2025 அக்டோபரில் வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படும் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார், கேவிஎன் புரொடக்சன்ஸ் படத்தை தயாரிக்கிறது.