இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் "சூரரைப் போற்று". இப்படத்தின் இரண்டாம் சிங்கள் ட்ராக் பாடலான ‘வெய்யோன் சில்லி’ இன்று வெளியிடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யா, "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங், நடிகர் சிவகுமார், மோன் பாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதுமட்டுமல்லாமல் அகரம் சார்பில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சூர்யா பேசியது “ ஒரு மனிதன் புதிதாக எதைக் கண்டுபிடித்தாலும், அது மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கு மதிப்பில்லாமல் போய் விடும். கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினருக்கும் கீழ் உள்ளவர்களே விமானத்தில் பயணம் செய்யமுடியும் என்ற நிலைமை இருந்தது. அதை நிலைமையை மாற்றியவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத். ஏனெனில் சாமனியனும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணத்தை ஒரு ரூபாயாக மாற்றிக்காட்டினார் கோபிநாத்.
இயக்குனர் சுதா கொங்கரா தனது வாழ்வின் 10 வருடத்தை இப்படத்திற்காக செலவிட்டுள்ளார். எனது சினிமா வாழ்விலேயே மிக முக்கியமான தருணமாக இதைப் பார்க்கிறேன். படத்தின் 30 நிமிட காட்சிகள் ஆகாயத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு ஒத்துழைப்பு தந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நன்றி. இப்படம் மூலமாக கிடைக்கும் அனைத்துப் புகழும் சுதாவுடையது. படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் மோகன் பாபுவின் காட்சிகள் அற்புதமானதாக இருக்கும்"
மேலும் தொடர்ந்த அவர் " இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் 100 பேரையும் அகரம் அறக்கட்டளையின் மூலம் வரவழைத்துள்ளோம். இதற்காக அவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் சிறப்பாக எழுதியதன் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்காக நாங்கள் வேறு எதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு, அவர்கள் அவர்களது தங்கையும், அம்மாவையும் விமானத்தில் பறக்கவைக்க முடியுமா என்று கேட்டதாக கூறினார் நடிகர் சூர்யா.