நடிகர் சோனுசூட் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விரைவில் இணைந்து அரசியலில் பணியாற்றப் போகிறார் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவர்.
கல்விகுறித்த முக்கியமான ஒரு பிரச்னை குறித்து சோனுசூட் அரவிந்த் கெஜ்ரிவாலை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அதன்பிறகு, இந்தியாவின் மிகச்சிறந்த நடிகரும், உதவும் குணம் படைத்தவருமான சோனுசூட், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விரைவில் இணைந்து அரசியலில் பணியாற்றப் போகிறார் என்ற தகவல் சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சோனு சூட். இதுகுறித்து தெரிவித்த அவர், “வெள்ளிக்கிழமை சோனு சூட் அரசியலுக்கு வரப்போகிறாரா என ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது எனக்குத் தெரியும். ஆனால் இல்லை. இப்போதும் எதிர்காலத்திலும் எனக்கு அதுகுறித்த திட்டம் இல்லை. மாநிலங்களவையில் எனக்கு சிலவாய்ப்புகள் வந்தது. ஆனால் என்னை அரசியலுக்குள் நுழைக்க நான் நினைக்கவில்லை. நான் எனது வேலையை அரசியலுக்குள் நுழையாமலே சிறப்பாக செய்ய நினைக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், “நான் கல்விக்கென்று பல செயல்களை செய்திருக்கிறேன். முதல் ஊரடங்கில் 27,000 மாணவர்களின் கல்விக்கு உதவினோம். ஆனால் இந்தமுறை அதைவிட 8லிருந்து 10 மடங்குக்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவியிருக்கிறோம். பள்ளி மாணவர்களின் படிப்பிற்கு உதவ வேண்டும் என்றால் நான் எதைப்பற்றியும் யோசிக்கமாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.