ஆன்லைனில் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில், இரும்புத் துண்டு வீடு தேடி வந்ததால் சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இப்போது சாப்பாடு, செல்போன் முதல் வீட்டுச் சாமான்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அமேசான் மூலம் ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். 18,000 ரூபாய் மதிப்புள்ள ஹெட்போனுக்கு ஆன்லைன் வழியாக பணமும் செலுத்தியுள்ளார்.
அதன்படி அமேசான் நிறுவனமும் அவருக்கு வீடு தேடி பொருளை அனுப்பிவைத்தது. பாக்ஸை பிரித்து பார்த்த சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி அடைந்தார். அதில் ஹெட்போன் இல்லாமல் இரும்புத் துண்டு இருந்துள்ளது. இதனையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட ஆதாரத்துடன் கொட்டித் தீர்த்தார். உங்களது வாடிக்கையாளர் சேவை கூட உதவி செய்யவில்லை. அது இதனை விட கொடுமையானது எனவும் ட்விட்டரில் பதிவிட்டார். சோனாக்ஷி சின்ஹாவின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், தவறுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. விரைவான தீர்வு எடுக்கப்படும் எனவும் அமேசான் உறுதி அளித்துள்ளது.
ஆன்லைன் வழியாக மொபைல் ஆர்டர் செய்தால் செல்போனுக்குப் பதிலாக செங்கல் வருவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் ரூ.1.25 லட்சத்துக்கு ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கு, போலி ஐபோன் வந்தது. இதுதொடர்பாக அவர் புகார் தெரிவித்ததால், அவர் செலுத்திய பணம் அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.