மதுரை விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்தினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார்.
அதில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது. ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எனவே அதை விவரமாக கூற விரும்புகிறேன்.
நான் அடிக்கடி மதுரை விமான நிலையம் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை நான், எனது சகோதரி, பெற்றோர் உட்பட குடும்பத்தினருடன் வந்திருந்தோம். அப்போது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார். மேலும் என் முகத்திலிருந்து முகக்கவசத்தை இறக்கியப் பிறகும் இரண்டு மூன்று முறை அவர் சோதனை செய்தார். நான் என்னவென்று கேட்டபோது, இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் இப்பொழுது எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இந்த புகைப்படத்திலும் இருக்கிறேன். இருந்தபோதிலும் அவர் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை.
தொடர்ந்து எனது ஏர்பேட் மற்றும் தொலைபேசியை சோதனை செய்து அருகில் இருந்த டிரைவில் தூக்கி வீசினார். ஏற்கனவே பலமுறை இதனால் எனது தொலைபேசிகள் தொலைந்து உள்ளது என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், இது மதுரை விமான நிலையம் இங்கு விதிகள் இப்படித்தான் இருக்கும் என்றார்.
தொடர்ந்து எனது அம்மாவின் கைப்பையில் இருந்த சில்லறைகளை முழுவதுமாக வெளியே எடுக்கும்படி கூறினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் சில்லறைகள் என்று தெரிந்தும் ஏன் அதை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்தியில் பேசினார்கள். மேலும் எனது சகோதரியின் பையில் சில மருந்துப் பொருட்கள் இருந்தது. அதை தூரத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் எதற்காக இந்த மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டார்.
தனிப்பட்ட ஒருவரின் உடல் நிலையை பொது இடத்தில் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, தனியே அழைத்து கேட்டிருக்கலாம். அதன் பிறகு நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, அங்கு வந்த ஒரு மூத்த அதிகாரி என்னிடம் என்ன பிரச்சனை எனக் கேட்டார். அப்போது நான் என் முக கவசத்தை கழட்டி காட்டிய போது நான் உங்களின் ரசிகர் இங்கு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
எனக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்கள் வயதானவர்களின் நிலைமை என்னவாகும். நான் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்துள்ளேன். அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் எனது பெற்றோரிடம் பேசிய விதம் என்னை அச்சுறுத்தியது. அவர்கள் வேலை சற்று கடினம் தான். அதற்காக அவர்கள் பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விதிகள் எதுவும் கிடையாது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.