நடிகர், உதவி இயக்குநர், பாடகர் என பன்முக திறமைகள் கொண்டவர் நடிகர் சித்தார்த். இயக்குநர் மணிரத்னத்துடன் உதவி இயக்குநராக இருந்தவரை, பாய்ஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாற்றியவர் டைரக்டர் சங்கர். அதற்குபிறகு மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் அடுத்தடுத்து கதாநாயகனாக கமிட் ஆன சித்தார்த், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிகமான படங்களில் நடக்க தொடங்கினார்.
தெலுங்கில் இவர் நடித்து ஹிட்டடித்த படங்கள் தான் பின்னர் தமிழில் “சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்” என்ற பெயரில் வெளியாகி ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தியது. சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் “அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்” என்ற பாடலையும் சித்தார்த் பாடியிருந்தார். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ஹிட்டடித்து குறிப்பிடத்தக்கது.
நடிகை அதிதி ராவை பொறுத்தவரையில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர். தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் 'மஹா சமுத்திரம்' என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகர் சித்தார்த் உடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் காதலர்களாக வலம் வந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. அப்போது விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பையும் வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் திருமணம் செய்துகொண்டிருப்பதை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் செய்துகொண்டிருப்பதை சமூகவலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கும் நடிகை அதிதி ராவ், “நீ தான் என் சூரியன், என் சந்திரன், என் அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்” என்று கவிதையாக உருகி பதிவிட்டுள்ளார்.
திருமணம் செய்துகொண்ட சித்தார்த்-அதிதி ராவ் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.