இளம் உதவி இயக்குநர் திடீரென மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ஷாந்தனு ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளது இணையவாசிகளின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் 30 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள், பதின்ம வயதினரும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு தவறாமல் முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் அறிவுறுத்தியும் வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநராக இருந்த ராமகிருஹ்ணா என்ற 26 வயதுடைய இளைஞர் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ஷாந்தனுவும் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், “அருமையான நண்பரை நேற்றிரவு இழந்திருக்கிறேன். மிகவும் திறமையான உதவி இயக்குநர். 26 வயதுதான். எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் வைத்திருக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். ஆனால் கடவுள் ரொம்பவே சீக்கிரமாக அவரை எடுத்துச் சென்றிருக்கிறார். பணியில் இருக்கும் போது திடீரென சரிந்தவர் அங்கேயே இறந்திருக்கிறார்.
வாழ்க்கை ஒரு நிலையற்றது. ராமகிருஷ்ணா தனக்கென எதையும் சேர்த்துக்கூட வைக்காதவர். எல்லாம் சில நிமிடங்களிலேயே முடிந்திருக்கிறது. இதில் வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் அவர் இறப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் எனக்கு ஃபோன் செய்திருக்கிறார். ஆனால் என்னால் எடுக்க முடியாமல் போயிருக்கிறது. அவரது அழைப்பை எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் வெறுப்புணர்வை விட்டொழிப்போம். ஒருவர் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பதில் மகிழ்ச்சியாக இருந்து ஒருவரின் சிரிப்புக்கும் காரணமாக இருப்போம். உலகின் மிகப்பெரிய எதிரியே மன அழுத்தம்தான். அதை தவிர்க்க முயற்சிப்போம்.
உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் எவரிடமாவது அதனை பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த வலியுடனேயே இருக்காதீர்கள். மன அழுத்தத்தை உங்களுக்குக்குள்ளேயே போட்டு அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள். அது உங்களையே தின்று தீர்த்துவிடும். “என்ன சார் இருக்கு இந்த உலகத்துல. அவ்வளவும் நெகட்டிவிட்டியும் வெறுப்பும்தான். அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு விலையே கிடையாது” என இதைத்தான் அடிக்கடி ராமகிருஷ்ணா என்னிடம் கூறுவார்.” என ஷாந்தனு குறிப்பிட்டிருக்கிறார்.