நடிகர் விஷாலின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அனுபவமின்மையே காரணம் என நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷாலுக்கு எதிராக நடிகர் சேரன் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். விஷாலின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்புமனு நிகாரிக்கப்பட்டதை அடுத்து அவர்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேரன், விஷாலுக்கு எதிராக நடத்திய போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாகவும், அதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விஷாலின் வேகமான வளர்ச்சிக்கும், வேகமான வீழ்ச்சிக்கும் அனுபவமின்மையே காரணம் என்றும் கூறினார். அத்துடன் தொழில் ரீதியான போட்டிகள் இருந்த போதிலும், விஷாலின் வீழ்ச்சி வருத்தமளிப்பதாக சேரன் தெரிவித்தார். அத்துடன் வரும் தயாரிப்பாளர் சங்க பொதுத்தேர்தலில் தங்களின் பிரச்னை குறித்து பேசுவோம் என்றும், விளம்பரத்திற்காக யார் ஆசைப்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் விஷால் அனுப்பியுள்ள கடிதத்திற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் சேரன் தெரிவித்தார்.