காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த்,
கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பேசிய சத்யராஜ், “தோழர்களின், தம்பிகளின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால் யாருமே பேசாதபோது நான் மட்டும் பேசினால் நல்லா இருக்காது. நான் என்றுமே தமிழர்களின் பக்கம். தமிழ் உணர்வுகளின் பக்கம் தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் சபை நாகரீகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட்டு, நான் இருக்கிறேன்” என்றார்.
பின்னர் முழக்கம் எழுப்பிய அவர், “வேண்டும் வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். மூடுங்கள், மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள். தமிழரின் உணர்வை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். ராணுவம் வந்தாலும் அஞ்சமாட்டோம். எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுங்கள் தைரியமுள்ளவர்கள் தமிழரின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒழிந்து கொள்ளுங்கள்.” என்று ஆவேசமாக கூறினார்.