தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தர் கூட்டம் நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர்கள் ராதாரவி, நாசர், சரத்குமார், கமல்ஹாசன், ரகுமான், நடிகை ரித்திகா உள்ளிட்ட பல நடிகர்நடிகைகள் பங்கேற்றனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு அனைவரும் 1 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைத்து நடிகர் நடிகைகளும் விஜயகாந்திற்கு மேடையில் புகழஞ்சலி செலுத்தினர்.
புகழஞ்சலி செலுத்திய சரத்குமார் பேசுகையில், “இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் என்று என் வாழ்வில் நினைத்து கூட பார்க்கவில்லை. புலன்விசாரணை திரைப்படத்திற்கு வில்லனாக நடிக்க வந்து போது, என்னை பார்த்து இவர் மீசை இல்லாமல் எப்படி இருப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு நிமிடத்தில் மீசை இல்லாமல் நான் விஜயகாந்தை சந்தித்தேன். இப்போது மீசையில்லாமல் அவரோடு நினைவேந்தல் நிகழ்ச்சி பங்கேற்றுள்ள சூழல் ஏற்பட்டுவிட்டது வருத்தமளிக்கிறது.
விஜயகாந்தைப்பற்றி மூன்று நிமிடம் பேச சொன்னார்கள். ஆனால் அவரைப் பற்றி மூன்று தலைமுறைக்கு கூட பேசலாம். 2000-2006 வரை நடிகர் சங்கத்தில் அவருடன் நான் பயணித்துள்ளேன். “நடிகர் வடிவேல் வரவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர், அவர் வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்த் நினைத்துப் பார்த்து அழுது இருக்கலாம். மறப்போம் மன்னிப்போம் என்று குணம் படைத்தவர் விஜயகாந்த். வடிவேலுவை நிச்சயம் மன்னித்து இருப்பார்”.
தமிழ் சமுதாயம் உள்ள காலம் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. விஜயகாந்தின் ஆன்மா நடிகர் சங்கத்தையும் தமிழ் சமூகத்தையும் ஆசிர்வதிக்கட்டும்!” என்று பேசியுள்ளார் சரத்குமார்.