இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ஹிட்டடித்த நிலையில், இருவரின் கூட்டணியில் மீண்டும் உருவாகியிருக்கும் படம் “வடக்குப்பட்டி ராமசாமி”.
1970 காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் காமெடி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படத்தில், நடிகர் சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நகைச்சுவை கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
முதன்முதலாக சந்தானம் 12 கோடி பொருட்செலவில் பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடித்துள்ளார். பியூப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இதை தயாரித்துள்ளார். டிக்கிலோனா வெற்றிக்கு பிறகு மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் “வடக்குப்பட்டி ராமசாமி” அனைவரின் கவனத்தையும் ஈர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் அறிவிக்கப்பட்ட இத்திரைப்பிடத்தின் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 2ம் தேதியான நாளை வெளியாகவிருக்கும் “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படம் உலகம் முழுவதும் 600 ஸ்கிரீன்களில் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சந்தானமும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்சினிமாவின் பெரிய நடிகர்களுக்கு இணையாக இத்திரைப்படத்தின் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை அமைந்திருப்பது, சந்தானத்திற்கு கிடைத்த ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை படம் வெளியாகி ஹிட்டடிக்கும் பட்சத்தில் அதிகப்படியான லாபத்தையும் இத்திரைப்படம் சந்தானத்திற்கு பெற்றுத்தரும். திரைப்படத்திற்கும் யு-சான்றிதழ் வழங்கப்படிருப்பது படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. படம் குறித்து கூறியிருந்த சந்தானம் கூட படத்தில் எந்தவிதமான இரட்டை வசனங்களும் இல்லாமல் எல்லோரையும் சிரிக்கவைக்கும் முயற்சியாகவே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சந்தானம், “எனக்கு இதுதான் முதல் பெரிய பட்ஜெட் படம். “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்பட பாணியில் ஒரு காமெடி படம் எடுத்து ஹிட் கொடுக்க ஆசைப்பட்டேன். அப்படி வந்த கதைதான் இது. இந்தப் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது. அனைவரும் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.