”’பதாய் ஹோ’ படத்தைவிட அதன் ரீமேக்கான ‘வீட்ல விசேஷம்’ நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் பாராட்டினர்” என்று கூறியுள்ளார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.
காமெடி நடிகர் என்று பயணித்த நடிகர் ஆர்.ஜே பாலாஜி கடந்த 2019 எல்.கே.ஜி படத்தை இயக்கி இயக்குநராகவும் உருமாறினார். இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, நயன்தாராவை வைத்து ’மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், தற்போது மூன்றாவதாக ‘வீட்ல விசேஷம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் வெளியான ’பதாய் ஹோ’ படம் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கதைக்கொண்ட இப்படத்தில் ஆயூஷ்மான் குரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்து பாராட்டுகளை குவித்தனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வாங்கி வைத்திருந்தார். கடந்த ஆண்டு ‘பதாய் ஹோ’ ரீமேக் ‘வீட்ல விசேஷம்’ படமாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பு ப்ளஸ் இயக்கத்தில் உருவாகி வந்தது. வரும் ஜுன் 17 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், ஆர்.ஜே பாலாஜி படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
”ஜீ ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் பே வியூ புராஜெக்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ரசிக்க ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பப் பார்வையாளர்களுக்காக, ஒரு அருமையான படைப்பாக இத்திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் இறுதிப்பதிப்பை பார்த்த தயாரிப்பாளர்கள் அசல் பதிப்பை விட (பதாய் ஹோ) ’வீட்ல விசேஷம்’ படம் நன்றாக இருப்பதாக பாராட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டியின் போது இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும். இந்த வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக சத்யராஜ் சார் மற்றும் அபர்ணா பாலமுரளி என்னுடன் மும்பையில் இருக்கிறார்கள். நாளை ட்ரெய்லரையும் ஜூன் 17, 2022 அன்று முழு நீள திரைப்படத்தையும் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
ஆர்.ஜே பாலாஜியுடன் பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.