”தெலுங்கு சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் கேப்டன் விஜயகாந்த்திற்கு கிடைத்தன; எனினும் தமிழில் மட்டும் நடிப்பதை விரும்பி, அவர் பிற மொழி திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார்” என விஜயகாந்த் உடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் ராம்கி.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை 6.10 மணியளவில் காலமானார். விஜயகாந்த் உடன் தேமுதிக அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பல தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் சந்தனப்பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. மக்கள் தங்கள் பேரன்பால் கேப்டனை வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துடன் செந்தூரப்பூவே திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகர் ராம்கி, கேப்டன் குறித்த படப்பிடிப்பு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசிய ராம்கி, “விஜயகாந்த் சார் உச்சத்தில் இருந்த போது எனக்கு முக்கியத்துவம் உள்ள செந்தூரப்பூவே படத்தில் நடித்தது அவருடையெ பெருந்தன்மை தான் காரணம். படப்பிடிப்பு தளத்தில் வந்து ”என்ன பா என்ன விட்டுட்டு உங்களுக்கு மட்டும் அதிக காட்சிகளை எடுத்துகிட்டிங்களா, ராம்கி லவ் பன்றான் அப்புறம் அவனே பொண்ணையும் இழுத்துட்டு போறான் இதுல எனக்கு என்னயா வேலை” என்றெல்லாம் எங்களை கிண்டல் பண்ணுவார். சண்டை காட்சி வரும்போதெல்லாம் எனக்கு சண்டை செய்ய சொல்லித்தருவார். நான் கராத்தே கத்திருந்ததால ஒரு ஸ்டைல்ல பண்ணுவன், அப்போ தம்பி நம்ம லோக்கலுக்கு வா பா ராம்கி என சண்டை செய்ய கத்துக்கொடுப்பார். அவர் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணமே நமக்கு தோனாத அளவுக்கு இயல்பா பழகுவார்.
படப்பிடிப்பு முடிஞ்சு கிளம்பும் போது எல்லோரும் விஜயகாந்த் சார் கிட்ட இருந்து தப்பிச்சிடனும்னு நினைப்பாங்க. சைலண்ட்டா பின்னாடி வந்து நின்னு இங்க் ஊத்தி விட்டுடுவாரு, எதாவது கலர் ஊத்தி விட்டுடுவாரு. சின்ன பசங்க மாதிரி சேட்டை பண்ணுவாரு சார். என்மேல ஊத்தவரும் போது சார் மறுநாள் போட்டுட்டு வரனும் சார் விட்டுடுங்கனு சொல்லிட்டு ஓடுவன். ”தப்பிச்ச போ நீ” என சொல்லுவாரு. அப்படி சின்ன குழந்தைங்க மாதிரி விளையாடுவாரு எல்லார்கிட்டயும்” என பேசினார்.
செந்தூரப்பூவே படம் குறித்து பேசிய அவர், “செந்தூரப்பூவே படம் தமிழில் வெற்றி அடைந்ததை விட தெலுங்கில் 300 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி அடைஞ்சது. அந்த படத்தோட வெற்றிக்கு பிறகு சாருக்கு நிறைய தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால் தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற அவருடைய கொள்கைக்காக அனைத்து வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டார். அவர் நடிக்க வேண்டிய ஒரு படத்தை எனக்காக விட்டுக்கொடுத்தார். பின்னர் என்னை வைத்தும் அவர் படம் தயாரித்தார்” என ராம்கி விஜயகாந்த் குறித்து புகழ்ந்து பேசினார்.