“என்னை சிகரெட் பிடிக்கக்கூடாதுனு அறிவுறுத்தியவர் சரத்பாபு” - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் #Video
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத் பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காக அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் சரத்பாபுவின் உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு, மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து சரத்பாபுவின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “சரத்பாபு நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள். நானும் சரத்பாபுவும் நடித்த படங்கள் எல்லாம் மெகா ஹிட். நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர், என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் சரத்பாபு. என்னை சிகரெட் பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தியவர் அவர்” என்று உருக்கமாக பேசினார்