கன்னட தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நடிகராக இருந்துவந்த சம்பத் ஜே ராம், கர்நாடக மாநிலம் பெங்களூரு நீலமங்களாவில் உள்ள அவரது இல்லத்தில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அவரின் இறப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 35 வயதான நடிகர் சம்பத் ஜே ராம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததாகவும், சரியான வாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலில் இருந்தாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
இந்தநிலையில், அவரின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான ராஜேஷ் துருவா சமூக வலைத்தளம் வாயிலாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது நண்பர் சம்பத் ஜே ராம் தைரியமானவர் என்றும், எப்போதும் கலைப் பற்றிய சிந்தனையுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘சம்பத் ஜே ராம் வாய்ப்புகள் இல்லாமல் மன வருத்தத்தில் இருந்ததாகவும், நிதிப் பிரச்சனையில் சிக்கி தவித்ததாகவும், அதனாலேயே அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் யூ-ட்யூப் தளங்களில் செய்திகள் பகிரப்படுவது வேதனை அளிக்கிறது’ என வீடியோவில் குறிப்பிட்டுள்ள ராஜேஷ் துருவா, அதிகளவிலான பார்வையாளர்களை பெறுவதற்காக இவ்வாறு தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஒருவரின் குணநலன்களை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும், தற்போது கூட புதிய படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்க கமிட் ஆகியிருந்ததாகவும் ராஜேஷ் துருவா குறிப்பிட்டுள்ளார்.
‘உயிரிழந்த சம்பத் ஜே ராம்-க்கு என்று குடும்பம் உள்ளது. இதுபோன்ற தவறான செய்திகள் வெளியாவது அவர்களை வேதனைப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ள ராஜேஷ் துருவா, சம்பவ தினத்தின்போது சம்பத் ஜே ராம், அவருடைய மனைவியுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தில் அவரை மிரட்டுவதற்காக தூக்கு போடுவது போன்று விளையாட்டாக செய்ய, கடைசியில் அது நிஜமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
சம்பத் ஜே ராம், அவரது மனைவியின் மேல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தாகவும், தற்போது அவரது மனைவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ராஜேஷ் துருவா தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்துக்கொண்ட சம்பத் ஜே ராமின் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட்டை, இதே டீ சர்ட் அணிந்துதான் எடுத்தேன் என்று கூறியுள்ள ராஜேஷ் துருவா, தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. அவ்வாறு எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெறுவதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.