'ஜெய் பீம்’ ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுக்கிறேன்-ராகவா லாரன்ஸ்

'ஜெய் பீம்’ ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுக்கிறேன்-ராகவா லாரன்ஸ்
'ஜெய் பீம்’ ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டிக்கொடுக்கிறேன்-ராகவா லாரன்ஸ்
Published on

 உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் நிஜ நாயகரான ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டிக்கொடுப்பதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்திருக்கிறார்.

 இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தினையே  ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள்.

 கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது. இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் 'ஜெய் பீம்' படமாக உருவாகி பாராட்டுக்களை  குவித்துக்கொண்டிருக்கிறது. கணவரின் நீதிக்காக கடைசிவரை போராடிய ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது நிலைக்குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் லாரன்ஸ் தற்போது வீடுகட்டித் தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அந்தப் பதிவில்,

 ”செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் வாழ்க்கை நிலைக்குறித்துக் கேள்விப்பட்டு துயருற்றேன். அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருக்கிறேன். 28 வருடங்களுக்குமுன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ’ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ’ஜெய் பீம்’ படத்தை உரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகா, இயக்குநர் ஞானவேலுக்கும்  என் பாராட்டுகளும் நன்றிகளும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com