‘வரும் ஆனா வராது’ என்ற நிலையில் இருந்த நடிகர் பிரசாந்த்தின் அந்தகன் திரைப்படம், இந்தவார இறுதியில் (ஆகஸ்ட் 9ம் தேதி) திரைக்கு வர ரெடியாகியுள்ளது. ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படம், தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் நடிகர்கள் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு, இயக்குனர் மாற்றம் போன்ற பிரச்னைகளால் வருமா வராதா என்ற நிலையில் இருந்த இந்தப்படம் ஒருவழியாக ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. வரும் ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த நேரத்தில் தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா முதலிய படங்கள் வெளியாக உள்ளதால் முன்கூட்டியே ஆகஸ்டு 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தகன் படத்திற்கு புரோமோஷன் கொடுக்கும் வகையில் பல யூடியூப் சேனல்களுக்கு நடிகர் பிரசாந்த் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு இண்டர்வியூவின்போது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார் பிரசாந்த். இதற்காக அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியிருக்கிறார். அதன் காணொளி இன்று காலை இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் “எல்லா விதிமுறைகளும் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா?” என கேள்விகளை எழுப்பி போக்குவரத்து காவல்துறையையும் டேக் செய்து கமெண்ட் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்திற்கு, பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபாரதம் விதித்துள்ளனர். கூடவே, தொகுப்பாளினிக்கும் ரூ 1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.