கமல் அண்ணனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்
கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரான பரமக்குடி அடுத்த தெளிச்சநல்லூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்ப உறுப்பினர்களான சாருஹாசன், சுகாசினி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் நடிகர் பிரபு, சினேகன், ஞானசம்பந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நட்டு, மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, கமல் அண்ணனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “அண்ணன் (கமல்ஹாசன்) மீது அப்பாவுக்கு (சிவாஜி) அளவு கடந்த பிரியம் உண்டு. எனக்கு திரையுலக வாரிசு என்றால் அது கமல் மட்டுமே என்று என் அப்பா சொல்வார்.
தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொண்டு என் தோள் மேல் ஏறிக்கொண்டு திரையுலகை கமல் அன்னாந்து பார்ப்பதாக என் அப்பா, அண்ணன் கமலை புகழ்ந்து பேசுவார். கமல்ஹாசன் அன்புக்கு அடிமை. கமல் அண்ணனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.