தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பொதுக்குழுவை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் சங்க பணம் ரூ.7கோடி கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் ஒருசிலர் போர்க்கொடி தூக்கி வந்தனர். மேலும் சங்கத்தில் பதவியில் உள்ள கவுதம் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் சங்கத்திற்கு வருவதே இல்லை என குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர்.
இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விஷால் கைது செய்யப்பட்டு மாலை ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சென்னையில் பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும் எனவும் அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.