ரூ.1.25 லட்சத்துக்கு ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கு, போலி ஐபோன் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், ’காதலில் விழுந்தேன்’ படம் மூலம் ஹீரோவானார். தொடந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து ’செய்’ என்ற படம் ரிலீஸ் ஆனது. தற்போது, ‘எரியும் கண்ணாடி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மனைவி ஸ்ருதிக்கு திருமண நாள் வருவதையொட்டி, ஐபோன் பரிசளிக்க நினைத்தார். இதற்காக ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆர்டர் செய்தார். மறுநாள் போன் அவரது வீட்டுக்கு வந்தது. அவர் வீட்டில் இல்லாத நேரம் போனை டெலிவெரி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர் வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது அது போலி ஐபோன் எனத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த நகுல், பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்தார். முதலில், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய நகுல், ஏராளமான கேள்விகளை கேட்டதையடுத்து, ‘எங்கள் நிறுவனத்தின் ஆட்கள் வந்து அந்த போனை வாங்கிவிட்டு, உங்கள் பணத்தை திருப்பித் தந்துவிடுவார்கள்’ என்று கூறினர். ஆனால் வரவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டார் நகுல். ‘அதற்கு அவர்கள் 12 நாட்களுக்குள் வருவார்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்துள்ள நகுல், இந்த கசப்பான அனுபவம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.