மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ’மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படம் கொரோனா சூழலால் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஆனால், கேரளாவில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல்தான் தியேட்டர்கள் 50 பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்தப் படத்திற்கு குறைந்த அளவிலேயே தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதிக விலைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வாங்காததாலும் படக்குழு படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது என்றும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய இப்படம் விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.