இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரணியம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் நலம்பெறவேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாடல்களால் அறியப்படும் நடிகர் மோகன், "அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. ரசிகன். பெங்களூருவில் இருந்த காலக் கட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தன. அவரது பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவரது எத்தனையோ பாடல்கள் கல்லூரி வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்தன" என்றும் நெகிழ்ந்துள்ளார்.
"தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி
தான் இசையமைப்பாளர். இசையமைத்து, அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார். மகேந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஜாக்கிங் செல்லும்போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ, எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை" என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் மோகன்.