துல்கர் சல்மானின் ‘குருப்’ படத்தை ஓடிடியில் வெளியிட 40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாகவும் அதனை, ரத்து செய்ய வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு ’குருப்’, ‘ஹே சினாமிகா’, ‘சல்யூட்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படம், செளபின் சாகிரின் புதிய படம் என நடித்து வருகிறார் துல்கர்.
இதில், கேரளாவையே கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் ‘குருப்’ நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தை துல்கர் சல்மானும் ஸ்டார் எண்டர்டைன்மெண்ட்டும் 35 கோடியில் இணைந்து தயாரித்துள்ளார்கள்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு கொரோனா சூழலால் தள்ளிப்போனது. ஆனால், மலையாளத்தின் முன்னணி நடிகர்களான ஃபகத் ஃபாசில், பிரித்விராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், ‘குருப்’ படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு கேட்டு ஒப்பந்தமும் செய்துள்ளது. ஆனால், படத்தைப் பார்த்த நடிகர் மம்முட்டி படம் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்திருக்கிறார். 'குருப்’ மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. துல்கரின் முதல் பான் இந்தியா படம் என்பது குறிப்பிடத்தக்கது.