செய்தியாளர்: புனிதா பாலாஜி
இந்திய சினிமாவின் ICON கமல்ஹாசன் 70-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்... எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி சரித்திர நாயகனாக மிரட்டிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் சிறப்புகளைப் பார்க்கலாம்..
சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலைஞர்கள் கோலோச்சுவார்கள்... அப்படி வெற்றி வாகை சூடியவர்கள் எல்லாம் காலத்தால் நிலைத்து நின்றுவிடுவதில்லை... வெற்றியானாலும், தோல்வியானாலும் தன் படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் மூலம், கலைத்துறையின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார், கமல்ஹாசன்... அவரை நடிகர் என்ற வட்டத்துக்குள் சுருக்கி விடமுடியாது...
இயக்குநராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக சினிமாவில் இன்னும் பல பரிமாணங்களை தொட்டவர், இந்த உலகநாயகன்.. அரை நூற்றாண்டுக்கு மேலான கலைப்பயணம்... நூற்றுக்கணக்கான படைப்புகள்.. நடிப்பு மட்டுமின்றி சினிமாவின் பிரதான துறைகளில் முத்திரை பதித்து, அரை நூற்றாண்டுக்கு மேல் இந்திய மக்களின் இதயங்களைக் கொய்து கொண்ட கலைஞனாகியிருக்கிறார், கமல்ஹாசன்..
64 ஆண்டுகளுக்கு முன் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் தொடங்கிய கமலின் வெற்றிப்பயணம், கடிகாரத்தின் நொடி முள்ளாய் இன்று வரை நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இவர் போடாத வேடங்கள் இல்லை, ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. இந்த சினிமா, கமலுக்கு எவ்வளவு புகழமையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறதோ? அதே அளவுக்கு தோல்வியையும், நெருக்கடிகளையும் கொடுத்திருக்கிறது.
கமலின் படங்கள் கமர்ஷியல் ரீதியில் வெற்றியடையாது என்ற விமர்சனங்களும் உண்டு... ஒரு படத்தில் வெற்றி கிடைத்துவிட்டால், அதே ஜானரில் இன்னும் 5 படங்கள் நடிப்பவர் அல்ல கமல்ஹாசன்... அந்த வெற்றியில் கிடைத்த லாபத்தை வைத்து சினிமாவில் பரிசோதனை முயற்சி செய்து பார்ப்பவர்.. அந்த தைரியத்தில் அவரை விஞ்ச ஆள் இல்லை எனலாம்.
விமர்சனமோ, பாராட்டோ எதுவக இருந்தாலும் அதை இன்முகத்தோடு ஏற்று, சினிமாவுக்காக பங்களிப்பை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதுதான், அவரின் தனித்துவம் எனலாம்..
ஆனால், அதற்கெல்லாம் துவண்டுவிடாத இந்த தனித்துவக் கலைஞன், 70 வயதிலும் வெற்றிகளை குவித்து வருகிறார். மக்கள் மனதில் இருந்து மறைந்துவிடாமல் 60 ஆண்டுகள் சினிமாவில் இருப்பதே சவால் எனும்போது, உலக நாயகனாக மின்னிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இந்த நட்சத்திரம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காமல் ஒளிவீசும் என்பதில் சந்தேகமில்லை.